Saturday, May 4, 2013
அயோத்திதாசரின் தமிழ் பெளத்தம்பாரி.செழியன்உலகம் அறியப்பட்ட கவிஞர், சமாதானம் மற்றும் மனித உரிமை ஆர்வலர், ஜென் பெளத்த துறவி. திச் நாத் ஹான் ( Ven.Thich Nhat Hanh) வியத்நாமிய யுத்த காலங்களில் பயங்கர வெடி சப்தத்தில் பெளத்த மடாலயத்தில், செவியையும் கண்களையும் இறுகமூடி தியானத்திலிருக்க பிடிக்காமல், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம், பள்ளிவசதி வீடற்ற குடும்பங்களுக்கு சேவை செய்ய கிளம்பினார். சமய நோக்கு பின்னொதுங்கி சமூதாயமும் விடுதலையும் என்ற இலக்கு முன்வைத்து, ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்படும் ஒரு முற்போக்கு மதமாக பெளத்தத்தை செயல்படுத்தினர். மரபான பெளத்தக் கொள்கையை நவீன சமூக விடுதலைக்கு ஈடுப்படுத்தப்பட்டன. துவக்கத்தில் 1964களில் வியத்நாம் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக பெளத்த துறவிகள் பாடுபட்டார்கள்.


பெளத்தப் போதனை, தியானம், பெருங்கருணை, பெளத்த மடாலயங்கள் அதோடு, சமூக சீர்திருத்தம் மற்றும் சமூக சேவைக்காக உருவாக்கிய பெளத்த சீர்திருத்த இயக்கம் ( Engaged Buddhist Movement) சமூக பிரச்சனைகளில் சுற்றுச்சூழல் பராமரிப்பில், அரசியல் செயல்பாடுகளிலும் பெளத்தம் பங்கேற்று உலகம் தழுவிய பொறுப்புணர்வு, எல்லா உயிர்களையும் பாதுகாத்தல் செயல்பாடுகளில் பெளத்தம் தன்னை ஈடுபடுத்தியது. இதுவே ஈடுபடுத்திக் கொண்ட பெளத்தம் ( Engaged Buddhism) என்கிறார். Naoyuki Ogi ( Engaged Buddhism According to Shinram ) திச் நாத் ஹான் அவர்கள் 1960களில் அறிமுகப்படுத்திய ஈடுபடுத்திக் கொண்ட பெளத்தம் ( Engaged Buddhism ) என்ற நவீன கருத்தியல், யுத்த நிவாரணம் வன்முறை களைதல், இனவிடுதலை, மனிதஉரிமை, சுற்றுச்சூழல் பராமரிப்பு, பால் உறவுகளில் சமத்துவம், சுகாதாரம் சிறைச்சாலை மேம்பாடு, பள்ளிக்கூட பணியிடங்களில் மேம்பாடு முதலிய செயல்பாடுகளில் பெளத்தம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.ஈடுபடுத்திக் கொண்ட பெளத்தம் அறிமுகமாவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழகத்தில் பண்டிதர் அயோத்திதாசர் (1845 - 19140 அவர்கள், சமூக சீர்திருத்தத்திற்கும், சாதி ஒழிப்பிற்கும் பெளத்தத்தை ஈடுபடுத்தினார். இந்திய சமூகத்தின் மிக மோசமான சமூகத்தீமை என்னும் சாதியால் புறக்கணிக்கப்பட்டு, காணாமை, தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளான தீண்டாதாரின் விடுதலைக்கு குரல் கொடுத்து, அவர்களின் மேம்பாட்டிற்கு வழிகாட்டினார். அவரின் முயற்சிக்கு பெளத்தமே சாதகமாக இருந்தது. இந்து மதம்தான் சாதிமதம் அதனை எதிர்த்தும் அதற்கு ஒரு மாற்று ஒன்றையும் கட்டமைப்பதற்கு ‘பெளத்தம்’ என்ற சாதி‡வருன எதிர்ப்பு மதம்தான் அவருக்கு புகலிடமாகப்பட்டது. சாதியால் இழிவு படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகவும் சமத்துவத்திற்காகவும் சாதி மறுப்பை அடித்தளமாகக் கொண்ட முற்றிலும் வேறு ஒரு புதிய பெளத்த ‘அடையாளத்தை’ கட்டமைத்தார். கடந்த கால வரலாறு, கட்டுக்கதைகள், நம்பிக்கைகள், மரபுவழி சித்த மருத்துவ அறிவு, தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கூறுகளுடன் பின்னிப் பிணைக்கப்பட்ட ஒரு ‘அடையாளம்’ முன் நிறுத்தப்பட்டது. ஒரு தமிழராக இருப்பதென்றால் ‘சாதியற்றவராக’ இருப்பதாகும் என்பதுவே அந்த அடையாளம். அதுதான் ‘தமிழ் பெளத்தம்’.தமிழக அளவில் இந்து,தமிழ் சைவம் என்ற அடையாளம் உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில், ஆறுமுக நாவலர் (1822 - 1879) என்ற சைவ அறிஞர் காலனி ஆதிக்கம் மற்றும் கிறித்துவ மதப் பரப்புதலுக்கு எதிராக தமிழர்களிடையே ஒருங்கினைந்த ‘தமிழர்’ அடையாளத்தைக் கட்டமைத்தார். கண்ணகி வழிபட்ட, உயிர்பலியிட்டு வழிபாட்டில் ஈடுபட்ட கோயில்கள் அனைத்தையும் சைவக் கோயிலாக மாற்றி தமிழ் சைவத்தை மீட்டுருவாக்கம் செய்தார். அவர் கட்டமைத்த தமிழர் அடையாளம் என்று சைவம் மற்றும் உயிர் சாதி வேளாளர்களை ஒருங்கிணைப்பாகும். பிராமணியத்திற்கு எதிராக ‘தமிழர்’ அடையாளத்தைக் கட்டமைத்தார், ஆனால் வர்ணாசிரமத்தையும், தீண்டாமை ஆதரவுக் கருத்துக்களையும் வெளிப்படையாகவே ஆதரித்தார். மேற்படி சைவ மடங்கள் ஆகியவற்றின் பால் அதிதிருப்தி கொண்ட இராமலிங்க வள்ளலார் (1823-1874) சமரச சன்மார்க்கம் என்னும் பாதை, பசி, கருணை போன்ற கருத்துகளின் வழியில் சைவ சமய கருத்துகளை பரப்புரை செய்தார். தமிழ் மரபில் ஒரு நவீனப் பண்பின் அடிப்படையில் அதனை செயல்படுத்தினார். ஆனாலும் காணமை, தீண்டாமைக் கொடுமைகளை கண்டிக்க அக்கறை கொள்ளவில்லை.அயோத்தித்தாசர் உருவாக்கிய ‘தமிழ் பெளத்தம்’ என்ற சிந்தனை அடிப்படையில் தமிழ்மொழிக்கும், பெளத்ததிற்குமான நெருக்கத்தை விவரிப்பதிலேயே துவங்குகிறது. ஆதிபெளத்தத்தை அழித்த மற்றும் சாதி அமைப்பிற்கும் காரணமான பிராமணியத்தை அவர் எதிர்த்தார். மேலும் சாதி அமைப்பிற்கும் இந்து சைவ சமயத்திற்கும் இடையில் உள்ள உறவை மையப்படுத்தினார். அதில் தமிழ் சைவ அடையாளத்தில் காணப்பட்ட உயர்சாதி ஆதிக்கத்தையும் கண்டித்தார். தமிழ் இலக்கிய மரபிலும், பெளத்த சிந்தனையிலும் வேர் கொண்டுள்ள சாதிகளற்ற, சமூக சமத்துவம் பற்றிய எண்ணங்கள், அயோத்தித்தாசரை ‘சாதியற்ற’ தமிழரை உருவாக்கும் அடையாளத்தை முன் மொழிய உந்தியது.தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மிக முக்கியமான சிந்தனையாளர் பண்டிதர்.க.அயோத்தித்தாசர் (1845-1914) பாரம்பரியமிக்க சித்த மருத்துவர், இளைமையில் தன் பாட்டனார் ‘பட்லர்’ கந்தப்பன், தந்தையர் கந்தசாமி ஆகியோரிடமும் சில தமிழசிரியர்களிடமும் பயின்றார். சென்னை தேனாம் பேட்டையில் வாழ்ந்த வல்லகாளத்தி கவிராஜ பண்டிதர் அயோத்தித்தாசரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். சென்னை பரங்கிமலை தவத்திரு பலபத்ர தேசிகானந்த அடிகளாரிடம் கைவல்யம், வேதம், வேதாந்தம், தத்துவதருக்கம் முதலியவற்றை கற்றறிந்தார். பிறகு சைவம், வைணவம் கிறித்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு அத்வைதியாக மாறி, சாதியற்ற நிலை, பகுத்திறிவும், சமத்துவமும் போற்றிப் பாதுகாக்கிறது என்ற ஓரே காரணத்திற்காக பெளத்த சமயத்திற்கு தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.ஒரு பைசா தமிழன் என்ற வார இதழை துவக்கி, ஏழு ஆண்டுகளில் பெளத்த நெறி விளக்கம், வேத மத எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, தமிழ் மொழியுணர்வு போன்ற நவீன கருத்தாடல்களை தமிழன் இதழில் உரையாடல் செய்து பின்னால் வந்த அரசியல் அமைப்புகளுக்கு முழுமையான கொள்கைகளை வழங்கிய மூலவர். ஆதிவேதம் என்ற புத்தரின் வாழ்க்கை வரலாற்றை, பெளத்தக் கோட்பாடுகளை பெரும்பாலும் தமிழ் மொழியில், தமிழ் இலக்கிய மரபிலேயே மீட்டுருவாக்கம் செய்தார்.


அயோத்திதாசர் ஜுலை 2, 1898 ல் இலங்கைச் சென்று பெளத்தம் தழுவினாலும், இலங்கை பெளத்த மரபை, சாயலை அவர் பின்பற்றவில்லை, அல்லது பெளத்ததில் அப்போது இருந்த ஹீனையானம், மஹாயானம், வஜ்ரயானம் போன்ற பிரிவுகளிலும் சேராமல் முற்றிலும் வேறுப்பட்ட ஒரு பெளத்தத்தை, தமிழ் மரபிலிருந்து தமிழ் இலக்கிய, நிகண்டு, வாய்மொழிக் கதைகள், தன் சொந்த அனுபவத்தோடும் கட்டமைத்தார். பெளத்தக் கொள்கைகயை புத்தரின் வாழ்க்கை வரலாற்றை, பாலிமொழியறிந்தும், அஷ்வகோசரின் புத்த சரிதத்தை மூலம் அறிந்தும், வேதங்கள், உபநிடதங்கள் என அறிந்தும் அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு பெளத்த அறத்தை விளக்குவதற்கு பெரும்பாலும் தமிழ் இலக்கிய சான்று ஆதாரங்களை வைத்து மீட்டுருவாக்கம் செய்தார். அறநெறி தீபம், அறநெறி சாரம், கஉதிரிக்குறள், திரிவாசகம், திரிகடுகம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, சூடாமணி... போன்ற பல தமிழ் இலக்கியங்களை பயன்படுத்தினார். அவ்வாறு கட்டமைத்த பெளத்தத்தின் மையப்பொருள் சாதியால் இழிவு செய்யப்பட்ட, சமுதாயத்தை மேம்படுத்த உருவாகிய கருத்தியலே ‘தமிழ் பெளத்தம்’. தமிழ் பெளத்தம் என்பது மரபான பெளத்தத் தத்துவங்களோடு பகுத்தறிவு, இறைமறுப்பு, சாதிஎதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, சமூகநீதி போன்ற நவீன சிந்தனைகளோடு பெளத்தத்தை பொருத்தி தமிழ் தன்மையோடு மறுவிளக்கம் தருகிறார். அதற்கு சமயச் சார்பற்ற, அறச்சார்புள்ள, சமஸ்கிருத இலக்கியத்திற்கு நேர் எதிராக விளங்கும் தமிழ்மொழியும், சாதி, வேத பிராமணியத்திற்கு எப்போதும் எதிராக செயல்படும் பெளத்தமும் அதன் அடிப்படைக் கூறுகளான பகுத்தறிவும். சமத்துவமும் தான் தமிழ் பெளத்தத்தின் கருத்தியலுக்கு மூலமாகப் பயன்பட்டன. சாதி ஏற்றதாழ்வை பாதுகாத்தல் அவற்றை கடவுள்தான் படைக்கப்பட்டதாக கூறி பாதுகாத்தல், அவற்றை ஆமோதிக்கிற நியாயப்படுத்துகிற கட்டுக் கதைகளைப் பரப்பி சமூகத்தில் பாகுபாடுகளை கட்டமைக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பது தான் தமிழ் பெளத்தத்தின் முதன்மையான கடமையாகக் கொண்டுள்ளது. சாதியைத் தாங்கி நிற்கின்ற பிராமணியத்தை சமரசமில்லாது எதிர்த்தே வந்துள்ளது. அதற்காக தமிழ் பெளத்த வழிமுறையில் சடங்குகளில் புரோகித ஆதிக்கங்களை மறுத்து சொந்த ஆய்வு அனுபவத்தின் வழியிலேயே செயல்பட்டது. பிராமண பூசாரியையும் வேத சடங்குகளும் இல்லாத சீர்திருத்த திருமணங்களை (1911களில்) முன்மொழிந்தது.தமிழ் பெளத்தர்கள் எவ்வித மதக்குறியீடுகளையும் கடைப்பிடிப்பதில்லை. உடலில் சாம்பல், நூல், மாலை போன்ற சின்னங்களையும் தரிப்பதில்லை. சாதிப் பட்டங்களை தம் பெயருடன் சேர்த்துக் கொள்வதில்லை. (1911வரை ஜி.அப்பாத்துரையார், ஜி.அப்பாத்துரைப்பிள்ளை என்றே அறியப்பட்டார்). இயற்கை கடந்த நிகழ்வுகளில் மந்திரம், மாயங்கள் போன்றவற்றில் தமிழ் பெளத்தம் ஈடுபடவில்லை. சீலத்தையும் ஒழுக்கத்தையும் நன்னெறி நடத்தையிலே தனியாக அறியப்பட்டார்கள். தென்னிந்திய சாக்கிய பெளத்த சங்கத்தின் நோக்கங்களான1) சாதிபேதமின்மை

2) பறையரை (பூர்வீகத் திராவிடரை) மேம்படுத்துதல்

3) மது மாமிசம் கைவிடுதல்

4) பஞ்சசீலம் பெறுதல்

5) அனைவரும் சமம்

போன்ற சமூக அறம் சார்ந்த பகுத்தறிவுக் கொள்கைளுக்கு முக்கியத்துவம் தந்தது.

புத்தருடைய பஞ்சசீலத்தை அடிப்படையாக வைத்து

1) எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டல்

2) ஏழையர்க்கு ஈதல்

3) நல்லொழுகத்தை கடைப்பிடித்தல்

4) மனதை அடக்குதல்

5) பிறர்மனை விரும்பாதிருத்தல்

6) பிறர் உயிர்களுக்கு தீங்கு செய்யாதிருப்பது

7) பொய்சொல்லி வஞ்சியாதிருத்தல்

8) அறிவை மயக்கும் பொருளை அருந்தாதிருத்தல்

9) பிறர் பொருளை களவாடாதிருத்தல்

10) காம வெகுளி மயக்கங்களை அகற்றல்பத்து ஒழுக்க நெறிகளை வகுத்து தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்தினார்கள். அதோடு தனி வழிபாட்டு மையம் வழிபாட்டு முறைகள், பிறப்பு, திருமண, இறப்பு சடங்குகள், தனிப்பள்ளிகள், தனிச்சுடுகாடு என தனித்துவமாய் செயல்பட்டார்கள். தமிழ் பெளத்த குறியீடாக, பெளத்த கருணை, சமூக பாகுபாடுகள் இல்லை, பகிர்ந்து கொள்ளல், சமத்துவம் மேலும் திரிசரணம்,தியானம், அன்னதானம். பஞ்சசீலம் எப்போதுமே தமிழிலேயே விளக்கப்பட்டன. சென்னை பெளத்த இயக்க செயல்பாடுகளால் பலர் பெளத்தராயினர். 1911ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் ‘பெளத்தர்’களைத் தனி சமயத்தவராக குறிக்கப் பெற்றனர். 1911-1921 ஆகிய கணக்கெடுப்பில் 1911ல் 697, 1921ல் 1222, 1923ல் 1200 என பெளத்தர் எண்ணிக்கை பதிவுண்டு. சென்னை மயிலாப்பூர் சுடுகாட்டில் இவர்களுக்கு தனியிடமும் ஒதுக்கப்பட்டது.
பெளத்த சமூக சீர்திருத்த இயக்கம்


சைவ, வைணவ சமயத்தால் வீழ்த்தப்பட்ட பெளத்தம் பத்தொண்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மீண்டும் தமிழகத்தில் மறுமலர்ச்சியடைந்தது. தென்னிந்திய சாக்கிய பெளத்த சமயம் சங்கம் 1898ல் துவக்கி அதன் கிளைகள் சென்னை புதுப்பேட்டை (1912), பெரம்பூர் (1917), நரசிங்கப்பூரம் (1916), வெளியூர்களில், வெளி மாநிலங்களில் கார்நாடகா, பெங்களுர், ஹீப்ளி, கோலார் தங்க வயல், ஹைதரபாத், வெளிநாடுகள் பர்மா, தென் ஆப்ரிக்கா என சாதியால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் தமிழ் பெளத்தம் பரவியது. சாக்கிய பெளத்த சங்கங்கள் சார்பாக பல மாநாடுகள் நடைபெற்றன. தலித் மக்கள் நலனுக்காக பல அரசியல் உரிமைகளைக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பபட்டன. இன்றைக்கு தலித்துக்கள் அனுபவிக்கும் அரசியல் உரிமைகள் அனைத்தும் தமிழ் பெளத்தர்கள் உழைப்பில் கிடைத்த பலனாகும். பெளத்த சங்க இயக்க செயல்பாடுகளால் பல எழுத்தாளர்கள் மேடை பேச்சாளர்கள் உருவாகி பின்னால் வந்த நீதிக்கட்சி, திராவிட இயங்கங்கள் வளர்ச்சிக்கு உரமானர்கள். பெரியார் ஈ.வெ.ரா, அம்பேத்கார் ஆகியோர் சிந்தனைகளில் தமிழ் பெளத்தம் ஆளுமை செலுத்தியுள்ளது.திருப்பத்தூர் நீதிக்கட்சி தலைவர், வழக்கறிஞர் ஜி.சாமிநாயுடு அவர்கள் மூலம் ஈ.வெ.ராமசாமி (1873-1973) பெளத்தச் செயல்பாடுகளை கவனித்து வந்தார். திருப்பத்தூர் எ.பி.பெரியசாமிப்புலவர் டி.என்.அனுமந்தர் ஆகியோர் 1907களில் திருப்பத்தூரில் பெளத்த சங்கத்தைத் துவக்கினார்கள். ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர், குடியேற்றம், பள்ளிகொண்டா, கீழ்ச்சூர், வண்ணவோடு, வாலாசபாத் போன்ற ஊர்களில் பெளத்த சங்கங்களை அமைத்து சமூக சீர்திருத்த, பிராமணிய எதிர்ப்பு‡சாதி ஒழிப்பு, சுயமரியாதைக் கருத்துக்களை பரப்பினார்கள்.தமிழ் பெளத்தர்களின் பிராமணிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பூசாரிகள் சடங்குகள் மறுத்த சீர்திருத்த திருமணங்கள், சமூக நீதிக் கருத்துக்கள், பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கத்தார்களை வெகுவாக ஈர்த்தது. ஜி.அப்பாத்துரையார், ஜி.சாமிநாயுடு இருவரும் பெரியாருக்கு சாக்கிய பெளத்த சங்க செயல்பாடுகளை அறிமுகம் செய்தும் இணைந்தும் செயல்பட்டார்கள். பெளத்த சங்கத்தார் நடத்திய பெளத்த மாநாடுகளில் பங்கேற்று பெரியார் பேசினார். அம்மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திராவிட இயக்கத்திற்கு மூலக்கொள்கைகளாக அமைந்தன. அயோத்திதாசரின் விகிதாச்சாரக் கொள்கை, எழுத்துச்சீர்திருத்தக் கொள்கை போன்றவை ஈ.வெ.ராவின் சிந்தனைக்கு அடித்தளமாக அமைந்தது என்பதை அவரே பதிவு செய்கிறார். “என்னுடைய சமூகசீர்திருத்தக் கருத்துக்களுக்கும், பகுத்தறிவு சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கும் மூலகாரணமாக இருந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாத்துரையுமே காரணம்” என்றார்.

புரட்சியாளர் அம்பேத்கார் அவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி வேறு ஒரு சமயத்திற்கு மாற வேண்டும் என எண்ணியபோது அதற்கேற்ற சமயம் பெளத்தமே என முடிவெடுப்பதற்கு தமிழ்பெளத்தம் காரணமாக இருந்தது. பெளத்த சமயத்தை ஒரு பகுத்தறிவார்ந்த, சாதி மறுத்த, விடுதலைகள் தரும் சமயமாக அறிந்து கொள்ள பேரா. பொக்கல லட்சுமிநரசு நாயுடு (1860-1934) அவர்களின் எழுத்துக்கள் தான் அம்பேத்காருக்கு உதவின. லட்சுமிநரசு அயோத்திதாசரின் கருத்து செயற்பாட்டாளர், அவருக்குப் பிறகு தென்னிந்திய சாக்கிய பெளத்த சங்கத்தினை வழிநடத்தினார். 1917, 1920, 1928, 1932 வருடங்களில் நடைபெற்ற பெளத்த மாநாடுகளில் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். லட்சுமிநரசு அவர்கள் எழுதிய 1) பெளத்தத்தின் சாரம் 2) சாதிகுறித்து ஆய்வு 3) நவீன பெளத்தரின் மதம் 4) இந்துமதமும் பெளத்தமும் 6) மணிமேகலையில் பெளத்தம் போன்ற நூல்களை எழுதினார். அதில் சிவிவிeஐஉe லிக்ஷூ யற்ddஜுஷ்விது 1907, வீஜுe விமிற்dதீ லிக்ஷூ ளீழிவிமிe 1922, யூeயிஷ்ஆஷ்லிஐ லிக்ஷூ மிஜுe னிலிderஐ யற்ddஜுஷ்விமி 1934) நூல்கள் அம்பேத்காரின் பெளத்த விசாலத்திற்கு காரணமாக விளங்கின என்பதை, லட்சுமிநரசு தனது “பெளத்த முன்னோடி” என்று அவரே பதிவு செய்கிறார். கோலார் தங்கவயல் பெளத்த சங்கத் தலைவர் திரு.அப்பாத்துரையார், சென்னை பெளத்த சங்க நிர்வாகி வி.பி.எஸ்.மணியர் இருவரும் தமிழக பெளத்த சங்க வரலாறு, செயல்பாடுகள், சாதி ஒழிப்பிற்கு எப்படி பெளத்தம் பயன்பட்டது என்றெல்லாம் அம்பேத்காருக்கு விளக்கினார்கள். தமிழகம், கோலார் தங்கவயலில் உள்ள பெளத்த சங்க செயல்பாடுகளை அறிந்து கொள்ள இரண்டு முறை நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகே 1956களில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் அம்பேத்கார் பெளத்தம் தழுவினார். அம்பேத்காரின் நவயான பெளத்தத்திற்கு மூலமாக தமிழ் பெளத்தமே விளங்கின. ஏனென்றால் அம்பேத்கார் பிறப்பதற்கு முன்பே சென்னையில் பெளத்த நெறி புழக்கத்தில் இருந்தது.துணை நின்ற நூற்கள்1. க.அயோத்திதாசர் ஆய்வுகள் (2004)

        ராஜ்கெளதமன்2. Religion as Emancipatory Identity

A Buddhist Movement Among the Tamils under colonialism (2000)

        G Aloysius3. க.அயோத்திதாசர் சிந்தனைகள் (1999)

மூன்று தொகுதிகள்

           ஞான. அலாய்சியஸ்4. தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல் (2011)

        ந.முத்துமோகன்5. கற்பி Educate அக்டோபர் ‡ நவம்பர் 19906. க.அயோத்திதாசர் அறிமுகம் - 2 (2011)

          அயோத்திதாசர் ஆய்வு நடுவம் ‡ மதுரை1 comment:

Vignesh Selvam said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

Post a Comment