Friday, April 17, 2009

ஒரு பைசாத் தமிழன் நூற்றாண்டு விழா





அயோத்திதாசப் பண்டிதர் நடத்திய 'ஒரு பைசாத் தமிழன்' வார இதழ் நூற்றாண்டு விழா தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக 08.07.2008இல் சென்னையில் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார் தன்னுடைய சட்டமன்ற கன்னியுரையில் (2006) "அயோத்திதாசர் நடத்திய 'ஒரு பைசாத் தமிழன்' இதழுக்கு அரசு சார்பில் நூற்றாண்டு விழா நடத்த வேண்டுமென" ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதனடிப்படையில், 2007-08 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 'அயோத்திதாசர் நடத்திய 'ஒரு பைசாத் தமிழன்' இதழின் நூற்றாண்டு விழாவைத் தமிழக அரசு நடத்தும்" என நிதியமைச்சர் அறிவித்தார்.
தங்கள் வாழ்வியல் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட வேதமத, பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, சமூகநீதி, சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புரை செய்வதற்காக, அயோத்திதாசர் 19.06.1907 அன்று பெரிய அளவு நான்கு பக்கத்திற்கு அன்றைய காலணா விலையில், சென்னை இராயப்பேட்டையிலிருந்து 'ஒரு பைசாத் தமிழன்' என்ற வார இதழை வெளியிட்டார். அதன்படி தமிழக அரசு 'ஒரு பைசாத் தமிழன்' நூற்றாண்டு விழாவை 19.06.2007இல் நடத்திருக்க வேண்டும். இது குறித்து, பிராமணிய மேலாண்மை சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை அல்லது தாங்கள் நடத்தும் இதழ்களில்கூட 'ஒரு பைசாத் தமிழன்' நூற்றாண்டு குறித்தோ அயோத்திதாசர் பற்றியோ ஒரு எழுத்துக்கூட எழுதியதில்லை. நூறு ஆண்டுகள் கடந்தும் அயோத்திதாசரின் கருத்துகளைப் பேசத் தயங்குகிறார்கள். ஆனாலும் உரிய காலத்தில் (2007) இல்லாமல் 101ஆம் ஆண்டில் அயோத்திதாசரது 'ஒரு பைசாத் தமிழன்' இதழுக்கு நூற்றாண்டு விழா மிகக் குறுகிய காலத்தில் விளம்பரமில்லாமல், எவ்வித அறிவிப்புமில்லாமல் எளிமையாக அடுத்து வரும் நூற்றாண்டு விழாவிற்கு இடையூறு இல்லாமல் கொண்டாடினார்கள்.
'உழைப்போர் ஆயுதம்', 'யாதும் ஊரே' போன்ற சிற்றிதழ்கள் 'ஒரு பைசாத் தமிழன் நூற்றாண்டுச் சிறப்பு மலர் வெளியிட்டன. "க. அயோத்திதாசப் பண்டிதர்" ஆவணப்படம் குறித்த செய்திகளைக் கடந்த மூன்று இதழ்களில் தொடர்ந்து 'காலச்சுவடு' இதழ் வெளியிட்டது. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அயோத்திதாசரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும்" எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 2008-09 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அயோத்திதாசரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவருடைய வாரிசுகளுக்கு 10 இலட்சம் ரூபாய் பரிவுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகாலமாக விடுதலைச் சிறுத்தைகளின் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றில் அயோத்திதாசர் படம் ஒரு (Logo) சின்னமாகத் தொடர்ந்து இடம்பெறுகிறது. இந்தாண்டு முதல் அயோத்திதாசர் பெயரில் விருதும் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இப்படியான தலித் மக்களின் எழுச்சி, விடுதலைச் சிறுத்தைகள் கொடுத்த நெருக்கடியில்தான் வெறும் (சம்பிரதாயத்திற்கு) சடங்கிற்காக ஒரு பைசாத் தமிழன் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட்டது. சினிமா (நடிகை செயசித்திரா மகன் இசை ஆல்பம் வெளியிடல்), கிரிக்கெட்டுக்கும் பரிசு வழங்கலுக்கும் கொடுத்த முக்கியத்துவம் திராவிட இயக்கம் உட்பட பல இயக்கத்திற்கு அடிப்படைக் கொள்கைகளை வழங்கிய 'ஒரு பைசாத் தமிழன்' நூற்றாண்டு விழாவிற்கு வழங்கப்படவில்லை.
அயோத்திதாசர் அரசியல் கருத்துகள் குறித்துப் பல நூல்கள் வெளிவந்து பத்தாண்டுகள் ஆனாலும் ரவிக்குமாரைத் தவிர்த்து யாரும் அயோத்திதாசர் குறித்து விரிவாகப் பேச இயலவில்லை. விழாவிற்குத் தலைமை தாங்கிய செய்தித் துறை அமைச்சர், தலித் மக்களுக்குத் தமிழக அரசு செய்த நலத் திட்டங்கள் குறித்துப் பட்டியலிட்டுப் பேசினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி புகழ் பாடினார். நிதியமைச்சர் பேசும்போது, "தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்குத் 'தமிழன்' என்ற உணர்வு ஊட்டிய முதல் அறிஞர். 'தமிழன்' என்று சொன்னால் தன்மானம் வரும், தீண்டாதார் என்று சொல்வதற்கு முறையில்லை, வாய்ப்பில்லை, நீண்ட பாரம்பரிய மிக்க வரலாற்றுச் சொந்தக்காரர்கள் என்றார். மேலும் அயோத்திதாசரின் சிந்தனைகள், எண்ணங்கள் திராவிட இயக்கத்திற்கு ஒரு நெருக்கம் ஒரு இழை இப்போதும் ஓடுகின்றது" என்றார்.
ரவிக்குமார் பேசும்போது "சாதி மறுப்புதான் பண்டிதரின் அரசியல் அடிப்படை. தமிழ்ச் சமூகத்தின், திராவிடத்தின் அடையாளமாகத் தமிழ் மொழியின் உணவாகச் சாதி ஒழிப்பை முன்மொழிந்த மிகச் சிறந்த ஞானிதான் அயோத்திதாசர். திராவிட இயக்கத்தின் வேராக, வித்தாக நாம் பண்டிதரைச் சொல்லலாம்" என்று தொடங்கி அயோத்திதாசரின் அரசியல் பணி, 'தமிழன்' இதழ் குறித்து விளக்கமாகப் பேசினார். மற்றும் பலர் பேசினார்கள்.
இதுவரை நூற்றாண்டு விழாக் கொண்டாடிய தமிழக அரசு ஏதாவது ஒரு அறிவிப்பு, செயல் திட்டம் என்று அறிவித்து வருட முழுவதும் கொண்டாடும். அப்படி ஏதும் அறிவிக்காமல் ஆடம்பரமில்லாமல் இதைக் கொண்டாடியது. இனிக் கொண்டாடப்படும் நூற்றாண்டு விழாக்களில் அரசு இந்த எளிமையைக் கடைபிடிக்குமா என்று கவனிப்போம்.

பார்க்க: காலச்சுவடு October -2008